×

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஓட்டல் மேலாளர் உள்பட 3 பேரிடம் நள்ளிரவு வரை சிபிசிஐடி விசாரணை: நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப முடிவு

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதலில் ஓட்டல் மேலாளர் சதீஷ் உள்பட 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். நள்ளிரவு வரை நீடித்த விசாரணையை தொடர்ந்து நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலின் போது பறக்கும் படையினருக்கு வந்த ரகசிய தகவலின்படி கடந்த மார்ச் 26ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் கணக்கில் வராத ரூ.4 கோடி ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதை கொண்டு வந்த பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஓட்டல் மேலாளரும், பாஜ உறுப்பினரான சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடப்பட்டனர். இதுகுறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், ரூ.4 கோடி விவகாரத்தில் பல முக்கிய பிரமுகர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்ததால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரன் ஓட்டல் மேளாளர் சதீஷ், அவரது சகோதரர் நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ரூ.4 கோடி ரொக்கம் குறித்து விளக்கம் அளிக்க கோரி ஓட்டல் மேலாளர் சதீஷ் உட்பட 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்கள் நேற்று மதியம் 12 மணிக்கு எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகினர்.  அப்போது, ரூ.4 கோடி பணம் யார் கொடுத்தது, அவ்வளவு பணத்தை தேர்தல் நேரத்தில் நெல்லைக்கு கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? சென்னையில் யாரிடம் இருந்து இந்த பணம் மொத்தமாக பெறப்பட்டது என 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு 3 பேரும் நள்ளிரவு வரை அளித்த பதிலை சிபிசிஐடி போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர். அந்த வாக்கு மூலத்தின் படி நெல்லை பாஜ வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு ஓட்டல் மேலாளர் உள்பட 3 பேரிடம் நள்ளிரவு வரை சிபிசிஐடி விசாரணை: நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்ப முடிவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,Nayanar Nagendran ,CHENNAI ,Satish ,Tambaram railway station ,Dinakaran ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...